சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சம் தொட்டுள்ள நிலையில், நாளை ராகுல் காந்தி தமிழகம் வருகை தருகிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றார். ராகுல்காந்தி தமிழக வருகையை முன்னிட்டு காங்கிரசார் நெல்லை, கோவையில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குபதிவுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தேர்தல் திருவிழாவாகத் தான் இருக்கிறது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலுவாக அமைந்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.